ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

How the WRP Betrayed Trotskyism

தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை எவ்வாறு காட்டிக்கொடுத்தது?

பகுதி. 1

 

7.  The Labour Government in Crisis

7. தொழிற் கட்சி அரசாங்கம் நெருக்கடியில்

1977 இல் தொழிற் கட்சி அரசாங்கம் அதன் நான்காம் ஆண்டு பதவிகாலத்தில் நுழைந்த போது, தொழிலாள வர்க்கம் முழுவதும் எதிர்ப்பு அதிகரித்து வந்ததை அது முகங்கொடுத்தது. தொடர்ந்து வரிசையாக முக்கிய வெகுஜன போராட்டங்கள் வெடித்தன. இதில் கிறவுன்விக், லேய்லன்ட் உதிரிப்பாக தொழிற்சாலை வேலைநிறுத்தம் மற்றும் இலண்டன் விமான நிலைய பராமரிப்பு பிரிவு மோதல் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும். அவை கலஹன் (James Callaghan) ஆட்சியை தொழிற்சங்கங்களுடன் ஒரு நேரடி மோதலுக்குக் கொண்டு சென்றன. TUC மற்றும் தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு இடையிலான "சமூக ஒப்பந்தம்" ("social contract") என்றழைக்கப்பட்ட ஒன்று தொழிலாள வர்க்கத்தின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலால் சிதறுண்டது. இத்தகைய போராட்டங்கள் உருவாகிக் கொண்டிருந்த நிலையில், தொழிற் கட்சி அரசாங்கம் அதன் பெரும்பான்மையைக் காப்பாற்றி வைக்கவும் மற்றும் பதவியில் நீடிக்கவும் முதலாளித்துவ தாராளவாத கட்சியுடன் ஓர் உத்தியோகபூர்வமற்ற நாடாளுமன்ற கூட்டணிக்குள் நுழைந்தது. தாராளவாதிகள் இந்த ஏற்பாட்டுக்கு உடன்பட்ட உண்மையே, டோரிக்களைப் பதவிக்குக் கொண்டு வர இன்னும் காலம் கனியவில்லை என்று பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் முடிவெடுத்திருந்ததை அர்த்தப்படுத்தியது. அதற்கு பதிலாக, அவர்கள் தொழிலாள வர்க்கத்தை தாக்கவும் நிலைகுலைய வைக்கவும் தொழிற் கட்சி வாதிகளையே இன்னும் சிறிது காலம் பயன்படுத்திக் கொள்ள தேர்ந்தெடுத்தனர்.

அரசியல் சூழலில் இந்த முக்கிய நிகழ்வானது, WRP, 1975 க்குப் பின்னர் இருந்து, தொழிலாளர் இயக்கத்துக்குள் சமூக ஜனநாயகத்துக்கு எதிரான அதன் போராட்டத்தை வழிநடத்த எந்தவித மூலோபாய கருத்துருவும் இல்லாமல் செயல்பட்டு வந்திருந்ததை எடுத்துக்காட்டியது. வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தி மற்றும் தொழிலாள வர்க்கத்தின் அகநிலை நனவு மீதான மிகவும் விஞ்ஞானபூர்வ மதிப்பீட்டின் அடிப்படையில், மூலோபாயத்திற்கும் தந்திரோபாயத்திற்கும் இடையிலான உட்தொடர்பு மீதும், புறச் சூழ்நிலையின் முக்கிய மாற்றங்களுக்கேற்ப சரியான நோக்குநிலையை கண்டுபிடிப்பதன் அவசியம் குறித்தும், கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை தொடர்ந்து கூர்மையாக மெருகேற்றி கொள்வது பற்றியும் ட்ரொட்ஸ்கி எழுதியிருந்த அனைத்தும் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

ஹீலியின் பதிவுவாத (impressions) இயக்கத்தில் இருந்து விடுபட்டு, வர்க்கப் போராட்டத்தின் இயங்கியலிலிருந்து பெறப்பட்ட மார்க்சிச வழியில் கட்சி போராடி இருந்தால், குறைந்தபட்சம் 1975 க்கு முன்பே, தொழிலாள வர்க்கத்திற்குரிய காலம் கடந்துகொண்டிருப்பதையும் மற்றும் தொழிற் கட்சி அரசாங்கத்தைப் பரிசோதிக்கும் ஒரு தவிர்க்கவியலாத காலத்தில் அது நுழைந்திருக்கின்றது என்பதை அது புரிந்து கொண்டிருக்கலாம். அதேவேளை, நிச்சயமற்ற இந்தக் காலப்பகுதி தொழிற் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக தவிர்க்கவியலாமல் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய எழுச்சிக்கு வழிவகுத்திருக்கும், அது புரட்சிகரமான தாக்கங்களைக் கொண்டிருந்திருக்கும் என்பதையும் அது உணர்ந்திருக்கலாம். அவ்விதத்தில் —வலதுசாரி சமூக ஜனநாயகவாதிகளை அம்பலப்படுத்துவதற்கு அவசிமான கோஷங்களை முன்னெடுத்தும், அரசாங்க கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டியும், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களுக்குள் அரசாங்க கொள்கையுடன் உடன்படாதவர்களுக்கு முறையீடுகள் செய்தும் மற்றும் தொழிற் கட்சி வட்டாரங்களுக்குள் வலதுசாரிகளை வெளியேற்ற போராடிக் கொண்டிருந்தவர்களுடன் ஒரு விமர்சனபூர்வ மற்றும் சுயாதீன அடிப்படையில் கூட்டுறவை மேற்கொண்டும்— WRP, வரவிருந்த தவிர்க்கவியலாத மோதலுக்காக தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பு செய்யும் அடிப்படையில் அதன் வழியை அமைக்க செயல்பட்டிருக்கலாம், அதேவேளையில் தொழிற்சங்கங்களுக்கு உள்ளேயும், தொழிலாள வர்க்க குடியிருப்பு பகுதிகளிலும் மற்றும் இளைஞர்கள் மத்தியிலும் கட்சியின் பணியைப் பொறுமையாக விரிவாக்கி இருக்கலாம். அபிவிருத்தியின் ஒவ்வொரு கட்டத்திலும், கட்சி அதன் கொள்கைகளுக்குத் தொழிலாளர்கள் மத்தியில் நிலவிய விடையிறுப்பை புறநிலையாக அறிந்து கொண்டிருக்க முடியும் மற்றும் வர்க்கத்தின் அரசியல் அபிவிருத்தி மட்டத்தை அளந்திருக்க முடியும். இந்த அடிப்படையில், அரசியல் சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, கட்சி அதன் பிரச்சாரத்திலும் கிளர்ச்சிகளிலும் அவசியமான திருத்தங்கள் மற்றும் உறுதிப்பாடுகளை அறிமுகம் செய்திருக்கலாம். அதுபோன்றவொரு நடைமுறையே "பொறுமையாக விளக்கமளித்தல்" மற்றும் "பரந்துபட்டமக்களை வென்றெடுத்தல்" என்று அழைக்கப்படுகிறது.

1917 இல் போல்ஷிவிக்குகள் பயன்படுத்திய வழிமுறையை ட்ரொட்ஸ்கி 1930 இல் ஆய்வு செய்தார்: "ஆஸ்திரிய நெருக்கடி பற்றிய எனது சிறிய படைப்பில், பொறுமையாக விளங்கப்படுத்தும் சூத்திரம் லெனினால் ஏப்ரல் 1917 இல் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை நான் வேண்டுமென்றே அடைப்புக்குறிக்குள் இட்டு குறிப்பிட்டேன். அதற்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் நாங்கள் ஆட்சியைப் பிடித்தோம். இதன் அர்த்தம், புரட்சிகரக் கட்சி பொறுமையாக விளங்கப்படுத்துவதற்கும் பின்னடிக்கும் தந்திரோபாயங்களுக்கும், படிப்படியாக செல்லுதல், அல்லது குறுங்குழுவாத பின்தங்கல்களுக்கும் பொதுவானது எதுவும் இல்லை என்பதாகும். எந்தவிதத்திலும் பொறுமையாக விளங்கப்படுத்துவது என்பது உற்சாகமற்ற பாணியில், சோம்பேறித்தனமாக, ஒரு நாளைக்கு ஒரு மேசைக் கரண்டி என்றளவில் விடயங்களை விளங்கப்படுத்துதல் என்ற உள்அர்த்தத்தைக் கொண்டதில்லை. ஏப்ரல் 1917 இல் இந்த சூத்திரத்தைக் கொண்டு லெனின் அவரின் சொந்த கட்சிக்கு கூறியதாவது: 'நீங்கள் மிகச் சிறுபான்மை என்பதை புரிந்துகொள்ள வேண்டும், வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்; இடைக்கால அரசாங்கத்தை உடனடியாக தூக்கியெறிவது போன்ற உங்கள் பலத்தைக் கொண்டு செய்யவியலாத பணியை உங்கள் மீது நீங்கள் சுமத்திக் கொள்ளாதீர்கள்; இன்று பெருந்திரளான மக்கள் பின்தொடர்ந்து செல்கின்ற பெரும் பெரும்பான்மை பாதுகாப்புவாதிகளை எதிர்க்கும் இடத்தில் உங்களை நிலைநிறுத்த பயப்படாதீர்கள்; நேர்மையான பாதுகாப்புவாதிகளின் —தொழிலாளர் மற்றும் விவசாயி இன்— மனநிலையைப் புரிந்து கொள்ள முயலுங்கள், போரிலிருந்து எவ்வாறு உடைத்து கொள்வது என்பதை பொறுமையாக அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்.' வேறு வார்த்தைகளில் கூறுவதானால், லெனின் அறிவுரையின் அர்த்தம், 'பெருந்திரளான மக்களின் நனவை வென்றெடுக்காமல் நீங்கள் உடனடியாக பலமாக வளர்வதற்கு ஏதாவது நவீன பரிகாரங்கள் அல்லது பகட்டான சூழ்ச்சித்திறன் இருக்கிறதா என்று சிந்திக்காதீர்கள்; “பொறுமையாக விளங்கப்படுத்துவதற்கு" உங்களின் எல்லா நேரத்தையும் செலவிடுங்கள், உங்களின் புரட்சிகர பொறுமையின்மை முழுவதையும் அர்ப்பணியுங்கள்.' இதுதான் லெனின் வார்த்தைகளின் உண்மையாக அர்த்தமாகும்.

“அடிப்படையில் ஆஸ்திரிய கம்யூனிஸ்டுகள் ஏழு மாதங்களில் அதிகாரத்திற்கு வந்துவிடுவார்கள் என்று நினைப்பதாக ஒருவர் என் வார்த்தைகளை அர்த்தம் செய்து கொண்டு நிச்சயமாக முற்றிலும் நேரெதிர் பக்கத்திற்குச் சென்று விடக்கூடாது. அதாவது, சுருக்கமாக கூறுவதானால், அது அவ்வாறு கிடையாது. ஆனால் வரவிருக்கும் காலத்தில் சம்பவங்கள் புயல் வேகத்தில் அபிவிருத்தி அடையுமென ஒருவர் உண்மையிலேயே கருதுகிறார் என்றால் (இதையும் தவிர்த்துவிட முடியாது), இது 'பொறுமையாக விளங்கப்படுத்துவதில்' இருந்து பெறும் ஆதாயங்கள் துரிதமாக மகத்தானதாக மாறும் என்பதையே அர்த்தப்படுத்துகிறது.

“ஆகையால் ‘இப்பொது மிகவும் காலம் தாழ்ந்துவிட்டது’ என்ற சொற்றெடர் எனக்கு முற்றிலும் பிழையான புரிதலாக தெரிகிறது. பாட்டாளி வர்க்க புரட்சியாளர்களுக்கு வேறென்ன வழிகள் இருக்க முடியும்? படுமோசமான அரசியல் பொறுமையின்மை என்பது விதைப்பதற்கு முன்னரே அறுவடை செய்ய விரும்புவதாகும், அது சந்தர்ப்பவாதத்திற்கோ அல்லது சகாசவாதத்திற்கோ அல்லது இரண்டின் கலவைக்குமோ இட்டுச் செல்கிறது. கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் நாம் பார்த்துள்ளோம், இதே நாட்டில், பாட்டாளி வர்க்கத்தின் நனவுபூர்வமான பங்களிப்பு இல்லாமல் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமையைச் செயற்கையாக பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பவாத மற்றும் சாகசவாத இரண்டினதும் டஜன் கணக்கான முயற்சிகளைப் பார்த்துள்ளோம். இந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்து, புரட்சிகர அணியை வெறுமனே பலவீனப்படுத்தி உள்ளன.

“ஆஸ்திரியாவின் சமூக ஜனநாயக வெகுஜனங்கள் புரட்சிகர மனநிலையில் இருப்பதாக நீங்கள் எழுதுகிறீர்கள், ஆனால் புரட்சிக்கான அவர்களின் தயார்நிலை ஆஸ்திரிய சமூக ஜனநாயகத்தின் சக்தி வாய்ந்த எந்திரத்தால் முடக்கப்பட்டுள்ளது. அந்த வெகுஜனங்களுக்கு ‘பொருத்தமான தலைமை மட்டுமே (nur) இல்லை’ என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் 'மட்டுமே' என்ற இந்த சிறிய வார்த்தை, முதல் பிரச்சார முயற்சிகளில் இருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவது வரையில், புரட்சிகர கட்சியின் ஒட்டுமொத்த நடவடிக்கை வரை உள்ளடக்கி உள்ளது. போராட்ட அனுபவங்களில் வெகுஜனங்களின் நம்பிக்கையை வென்றெடுக்காமல், புரட்சிகரத் தலைமை என்பது இருக்க முடியாது. சில காலகட்டங்களில் இந்த நம்பிக்கையை வென்றெடுக்க பல தசாப்தங்கள் ஆகலாம். புரட்சிகர காலக்கட்டங்களில், ஆண்டாண்டாக அமைதியான சம்பவங்கள் உருவாக்கியதை விட (சரியான கொள்கைகளைக் கொண்ட) ஒருசில மாதங்களே அதிகமானவற்றை உருவாக்கிவிடும். ஆனால் கட்சி ஒருபோதும் இந்த அடிப்படை பணியை விட்டு தாவி சென்றுவிட முடியாது. அதுதான் ஆஸ்திரிய பாட்டாளி வர்க்க புரட்சியாளர்கள் முழுமையாக எதிர்கொள்வது. பொறுமையாய் விளங்கப்படுத்துவது என்ற வார்த்தை அனைத்திற்கும் மேலாக இந்த பணியைத் தான் குறிப்பிடுகிறது: 'தொழிலாளர்களின் நம்பிக்கையை வென்றெடுங்கள்!' அது அவசியமாக சாகசவாதத்திற்கு இட்டுச் செல்லும் அந்த அதிகாரத்துவ சுய-ஏமாற்றத்தனத்திற்கு எதிராகவும், பகட்டான அணுகுமுறைகளுக்கு எதிராகவும், வரலாற்றை ஏமாற்றும் நோக்கில் திரைக்குப் பின்னால் சதி செய்பவர்களுக்கு எதிராகவும் மற்றும் ஒருவரின் விருப்பத்தை வர்க்கத்தின் மீது திணிப்பவர்களுக்கு எதிராகவும் அது எச்சரிக்கிறது.” (லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்கள் 1930, பாத்பைன்டர் பிரசுரம், பக்கம் 71-73)

நாம் இந்த கடிதத்தில் இருந்து இந்தளவுக்கு நீளமாக மேற்கோள் காட்டியுள்ளோம், ஏனென்றால் இதன் ஒவ்வொரு வார்த்தையும் ட்ரொட்ஸ்கி WRP தலைமையைக் கடிந்து கொண்டு எழுதியதைப் போலவே எழுதப்பட்டுள்ளது.

1975-77 இன் முக்கியமான இடைமருவு காலப்பகுதி ஹீலி மற்றும் பண்டாவினால் விரையம் செய்யப்பட்டது, சம்பவங்கள் என்ன கட்டத்தில் மற்றும் என்ன வேகத்தில் இருக்கின்றன என்ற பிரச்சினைகள் மீது கண்டுங்காணாது இருந்த இவர்களால், எல்லா சந்தர்ப்பங்களிலும் மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை —"தொழிற் கட்சி அரசாங்கத்தை கீழிறக்கு"— என்று மட்டுமே கூச்சலிட முடிந்தது. இவ்விதத்தில், 1977 இல் தொழிற்சங்கங்களுக்கும் தொழிற் கட்சி அரசாங்கத்திற்கும் இடையே நிஜமான மோதல் வெடித்தபோது, WRP எங்குமே தொழிலாள வர்க்கத்திற்கு நெருக்கமாக இருக்கவில்லை. இந்தப் பாதிப்பு, தொழிலாள வர்க்கத்திற்குள் WRP இன் இறுதி நிலைப்பாட்டிற்கு பெரும் விலை கொடுத்திருந்ததை அம்பலப்படுத்தியது. இந்த அவசியமான வெற்றிகள் கிடைத்திருந்தால் பாரிய போராட்டங்களில் குறிப்பிடத்தக்க தலையீட்டுக்கு அவை கட்சியைத் தயார் செய்திருக்கும். 1975 இல் இருந்து, நாளிதழும் கணிசமான உறுப்பினர்களும் இருந்தபோதும், நியூஸ் லைன் செய்தியாளர்களைத் தவிர, WRP ஆல் அதன் காரியாளர்களது பணி மூலமாக அது பிரதான பாத்திரம் வகித்த ஒரேயொரு போராட்டத்தைக் கூட சுட்டிக்காட்ட முடியவில்லை. தொழிற்சங்கங்களுக்குள் வளர்ச்சி குறித்து எந்த ஆதாரமும் இல்லை, தொழிற் கட்சி மீது WRP க்கு மொத்தத்தில் எந்த கொள்கையும் இல்லை என்ற நிலையில் அது குறித்து குறிப்பிட வேண்டியதே இல்லை.

அரசியல்ரீதியில், WRP அதன் வரியில் கூடுதல் அடைசொற்களைச் சேர்ப்பதை தவிர வேறொன்றும் சேர்ப்பதற்கு இல்லை. இவ்விதத்தில், ஆகஸ்ட் 1977 முன்னோக்கு ஆவணம் அறிவித்ததாவது: "ஜூலை 1975 இல் இருந்து தொழிற் கட்சி அரசாங்கத்தைக் கீழிறக்க நாம் அழைப்பு விடுத்ததைப் போலவே, தொழிலாளர் புரட்சிக் கட்சி தாராளவாத-தொழிற் கட்சி கூட்டணி அரசாங்கத்தைக் கீழிறக்கவும் மிகவும் உறுதியுடன் போராடுவதற்கு அழைப்புவிடுக்கிறது." (பக்கம் 7)

தாராளவாதிகள் உடனான நாடாளுமன்ற கூட்டின் அரசியல் முக்கியத்துவத்தை தீவிரமாக எடுத்துக்காட்டுவதற்கு அப்பாற்பட்டு, ஏதேனும் தீர்க்கமான மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதன் மீது தொழிலாளர்கள் ஐயுறவு கொள்வதற்கு மட்டுமே இந்த அறிக்கை சேவையாற்றும். நியூஸ் லைன் வரிகளை வாசித்த ஒரு தொழிலாளர் இவ்வாறு வினவக்கூடும்: "தொழிற் கட்சிவாதிகள், தாராளவாதிகளுடன் கூட்டணி ஏற்படுத்தி கொண்டிருப்பதால் அவர்களைக் கீழிறக்க வேண்டுமென நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நீங்களே அந்த கூட்டணி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அமைக்கப்பட்டுவிட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கிறீர்கள்."

ஒரு மார்க்சிச தலைமையைப் பொறுத்த வரையில், தாராளவாதிகளை நோக்கி கலஹன் திரும்பியபோது, அது நிச்சயமாக சமூக ஜனநாயக துரோகிகளுக்கு எதிராக வர்க்க நிலைப்பாட்டை அதிவேகமாக கூர்மையாக்குவதற்கான சந்தர்ப்பமாக இருந்திருக்கும். அது கலஹன் மற்றும் அவரின் வலதுசாரி மந்திரிசபையை வெளியேற்றுவதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற் கட்சிக்கு உடனடியாக அழைப்பு விடுத்திருக்கலாம் — அவ்விதத்தில் வேகமாக அபிவிருத்தி அடைந்து கொண்டிருந்த கணிசமான பாரிய இயக்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டிருக்கலாம். சொல்லப் போனால், இந்த கோரிக்கையை இங்கேயும் அங்கேயுமாக உயர்த்துவது போதுமானதாக இருக்காது. அதற்கு பதிலாக, தொழிலாளர் இயக்கத்தின் எல்லா மட்டங்களிலும் இதற்கு நீடித்த வேலை அவசியப்படும். WRP இனது பழைய நிலைப்பாட்டின் தொடர்ச்சி புதிய சூழ்நிலையுடன் பொருந்தி இருந்ததாக காணப்பட்டாலும், நின்று போன ஒரு கடிகாரம் (பகல் நேரமா அல்லது இரவு நேரமா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பாத வரையில்) ஒரு நாளைக்கு இரண்டு முறை சரியாக செயல்படும் என்றளவுக்கு மட்டுமே அது இருந்தது. மார்க்சிச வழிமுறைக்கு எதிராக அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு பிழையான வழி, புரட்சிகர நடவடிக்கையின் நிலைப்பாட்டில் இருந்து, புறச்சூழ்நிலையின் எதிர்பாராத மாற்றத்தின் காரணமாக சரியானதாக ஆகிவிடாது. வர்க்க போராட்டத்தினுள் புதிய அரசியல் அபிவிருத்திகளுக்கும் WRP இன் நிலைப்பாட்டிற்கும் இடையில் இருந்த ஏதோவொரு ஒத்தத்தன்மையும், அது கடந்த காலத்தில் ஆகட்டும் அல்லது நிகழ்காலத்தில் ஆகட்டும், முற்றிலும் தற்செயலானதொன்றே.

1977 மார்ச் 23 இல் தொழிற் கட்சி-தாராளவாத கட்சி உடன்படிக்கையின் உருவாக்கத்தை, தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP), சமூக ஜனநாயகவாதிகளின் இரட்டைவேஷத்தை நிரூபித்துக்காட்டும் நிலைப்பாட்டிலிருந்தும், அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்குவதற்கான அதன் முந்தைய அழைப்பை நியாயப்படுத்தும் நிலைப்பாட்டில் இருந்தும் அணுகியது. தாராளவாதிகளின் ஆதரவைக் கோர கலஹனை நிர்பந்தித்த வர்க்க போராட்டத்திற்குள் நடந்த மாற்றங்களை அது ஆராயவில்லை என்பதுடன், அந்த அடிப்படையில் வேகமாக துருவமுனைப்பட்டு வந்த தொழிலாள வர்க்கத்தின் பாரிய அமைப்புகளுக்குள் தலையீடு செய்ய உதவக்கூடிய புதிய தந்திரோபாயங்களையும் WRP திட்டமிடவில்லை.

தொழிற்கட்சி-தாராளவாதிகள் உடன்படிக்கைக்கு முன்னதாக, நியூஸ் லைன் "தொழிற்கட்சி கைப்பற்றுவதற்குத் தயாராக உள்ளது" என்ற தலையங்கத்துடனான இந்த நகைப்புமிக்க தலைப்பு, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை பிரதிபலித்த தொழிற் கட்சிக்குள் நிலவிய அரசியல் நெருக்கடி மீது முக்கிய கவனத்தை இருத்துவதில் இருந்து ஒரு திசைதிருப்பலாகும், இது தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை பிரதிபலித்தது. அந்த கட்டுரை தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றேமன் எழுப்பிய கேள்வியை குறிப்பிட்டது:

“தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தை ஏன் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்பதற்கு உண்மையிலேயே ஏதாவது சரியான காரணம் உள்ளதா?

“எனது தொகுதியில் பாரியளவில் வேலையின்மை, குறைந்த கூலிகள், விலைவாசி உயர்வுகள், மருத்துவமனை வார்ட்டுகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கல்லுரிகளின் மூடல் மற்றும் நாடெங்கிலும் 3 மில்லியன் விதவைகளின் கூறவியலா துன்பமும் இழப்புகளுக்கும் இட்டுச் சென்றுள்ள ஒரு அமைப்புரீதியிலான பொருளாதார மூலோபாயத்தை வேண்டுமென்றே இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது."

மிகவும் குறிப்பிடத்தக்கது தாராளவாதிகள் உடனான உடன்படிக்கைக்கு விடையிறுத்து அப்போது யோர்க்க்ஷையர் NUM தலைவராக இருந்த ஆர்தர் ஸ்கார்கில் (Arthur Scargill) வெளியிட்ட அறிக்கையாகும்: "அது (அரசாங்கம்) தாராளவாத கட்சியுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டிருக்கக் கூடாது என்பதுடன், 1974 இல் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியுடன் இப்போது முரண்படும் ஒரு தேர்தல் வாக்குறுதியைக் கொண்டு பதவியில் இருக்க தயாரிப்பு செய்திருக்கக்கூடாது என்பது என் கருத்து... உண்மையில் தாராளவாதிகளுடன் நாங்கள் கூட்டணி ஏற்படுத்த தயாரிப்பு செய்வதாக இருந்தால் பின்னர் ஒரு கேள்வி முன்வைக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது: அதாவது, டோரிகளுடன் ஒரு கூட்டணியை ஏற்க சூழ்நிலை கட்டளையிட்டால் மற்றும் தயாரிப்பு செய்ய வேண்டி இருந்தால் நாம் முன்நகர்வோமா?” (நியூஸ்லைன், மார்ச் 28, 1977) மிக முக்கியமாக, இந்த அறிக்கை இரண்டாம் பக்கத்தில் சில விடயங்கள் உட்பொதிந்திருந்தன, கூட்டணியை எதிர்ப்பதற்காக இடதுகளை சவால் செய்தும் மற்றும் கலஹன் மந்திரிசபையை நீக்குவதற்குப் போராடுவதில் அவர்களுக்கு முக்கிய ஆதரவை வழங்கியும், தொழிலாளர் இயக்கத்திற்குள் ஆழமடைந்து வந்த முரண்பாடுகளுக்கு எந்தவொரு முன்னோக்கும் இல்லை என்பதை அது வெளிப்படுத்தியது.

தொழிற்சாலைகளில் சாமானிய தொழிலாளர்களிடையேயும் மற்றும் தொழிற் கட்சிக்கு உள்ளே கீழ்மட்ட அணியினரிடையேயும் கூட, WRP காரியாளர்கள் மூலோபாயரீதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்தால், அத்தகைய ஒரு பிரச்சாரம் அளப்பரிய விதத்தில் பலமடைந்திருக்கும் என்பதுடன் பரந்த சாத்தியக்கூறுகளைத் திறந்து விட்டிருக்கும் என்பதைக் குறிப்பிட்டே ஆக வேண்டும். அது TUC செயலர் லென் முர்ரே இன் நிலைப்பாட்டுக்கு எதிராக ஓர் அரசியல் பிரச்சாரத்தைத் தொடுத்திருக்கக்கூடும், அவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “தற்போதைய இந்த அரசாங்கம் அது தொடங்கிய வேலையைச் செய்வதற்காக பதவியில் நிலைத்திருக்க வேண்டுமென TUC விரும்புகிறது,” என்றார். (நியூஸ் லைன், மார்ச் 22, 1977)

ஆனால் தொழிற் கட்சி-தாராளவாதிகளுக்கு இடையிலான உடன்படிக்கைக்கு (Lib-Lab pact) எதிராக கூச்சலிட்டதற்கு அப்பாற்பட்டு எதையும் செய்ய மறுத்தமை, WRP இப்போது "ஆட்சி அதிகாரத்திற்காக தயாரிப்பு" செய்து கொண்டிருக்கவில்லை என்று வாதிட்ட பகட்டாரவாரமான வாய்சவடால் கொண்டு மூடிமறைக்கப்பட்டது. ஆனால் ஹீலியோ வேறுவிதத்தில், WRP இப்போது நேரடியாக "அதிகாரத்திற்கான போராட்டத்தில்" ஈடுபட்டிருப்பதாக அறிவித்தார். WRP இன் நிஜமான நடைமுறையைப் பொறுத்த வரையில், இந்த வார்த்தையளவிலான மாற்றம் மொத்தத்தில் எதையும் அர்த்தப்படுத்தவில்லை. அதற்கு மாறாக, அதுவொரு சூத்திரமாக சேவையாற்றியது, அது, அதன் அடுத்தடுத்த அனைத்து பாதிப்புகள் இருந்தபோதும், WRP இன் அரசியல் தவிர்ப்புவாதத்தையும் (abstentionism) மற்றும் தொழிலாள வர்க்கத்தில் இருந்து அது குறுங்குழுவாக தனிமைப்பட்டிருந்ததையும் நியாயப்படுத்தியது. போல்ஷிவிசத்தின் மொழியில் கூறுவதானால், அதிகாரத்திற்குத் தயாரிப்பு செய்வது என்பது பெருந்திரளான மக்களை வென்றெடுப்பதற்கான போராட்டமாகும். மூன்றாம் அகிலத்தின் 1921 மூன்றாம் மாநாடு பிரகடனப்படுத்தியவாறு, அதிகாரத்தைக் கைப்பற்ற கட்சி முதலில் பெருந்திரளான மக்களை வென்றெடுக்க வேண்டும். அந்த அடிப்படையில் மட்டுமே அது அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க முடியும். இந்த விதிமுறை பிரதானமாக அப்போது சுமார் ஒன்றரை மில்லியன் உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவத்தை அடிப்படையாக கொண்டிருந்தது என்றாலும், 1977 இல் அந்தளவுக்கு உறுப்பினர்களைக் கொண்டிருக்காத தொழிலாளர் புரட்சிக் கட்சி விடயத்தில் லெனின் அந்த அனுபவத்தைப் பயன்படுத்த ஒப்புக் கொண்டிருப்பார் என்றே நாம் நம்ப முற்படுகின்றோம்.

ஆனால் ஹீலி, லெனினையும் கடந்து சென்று, பெருந்திரளான மக்களை வென்றெடுப்பது ("அதிகாரத்திற்குத் தயாரிப்பு செய்வது") என்பது அதிகாரத்திற்கான போராட்டத்தின் நெடுஞ்சாலையிலிருந்து அவசியமின்றி விலகுவதாகும் என்று நிரூபிக்க முயன்றார். WRP இன் 1977 ஆகஸ்ட் மாநாட்டு குறிப்புப்படி, “கட்சி வகிக்கும் பாத்திரத்தை எண்கணித காரணிகளாக சுருக்கிவிட முடியாது.” இது முற்றிலும் உண்மைதான் — காரியாளர்களை அரசியல்ரீதியில் முறுக்கேற்றுதல், கட்சி மற்றும் அதன் தலைவர்களின் தார்மீக அதிகாரம், கட்சி பிரதிநிதித்துவம் செய்யும் வரலாற்று மரபு போன்ற காரணிகள், கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை எடுத்துக்காட்டுவதை விட, அதையும் கடந்து கட்சிப் பலத்தை நீடித்து அளப்பரிய புரட்சிகர முக்கியத்துவத்தை பெறமுடியும். ஆனால் அப்போதும், 600 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தைத் தூக்கியெறிந்து விடும் என்பது பெரிதும் நினைத்துப் பார்க்க முடியாததாக இருக்கலாம். இல்லை, எண்கணித புள்ளிவிபரங்கள் மட்டுமே புரட்சியைத் தீர்மானிப்பது கிடையாது என்றாலும், எண்ணிக்கையின் முக்கியத்துவம் மீது முறையான அழுத்தத்தை வைக்காமல் அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும் புரட்சிகர கட்சி கவலை கொள்ள வேண்டியிருக்கும்.

கிரவுன்விக் போராட்டம் உச்சத்தில் இருந்த, 1977 கோடையில், WRP க்குள் நிலவிய அரசியல் ஒழுங்கீனம் அதன் ஆகஸ்ட் மாநாட்டின் மத்திய தீர்மான முடிவில் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டது:

“முதலாளித்துவ அரசின் முன்னால் தொழிற் கட்சி தலைவர்களின் கோழைத்தனத்தையும் துரோகத்தையும் தொழிலாள வர்க்கத்துக்கு அம்பலப்படுத்துவதற்காக, கட்சி முன்னதாக, 'தொழிற் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்து சோசலிச கொள்கைகளை செயல்படுத்த அந்த தொழிற் கட்சி அரசாங்கத்தை நிர்பந்தித்தல்' என்ற கொள்கைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

“1917 இல் லெனின் ‘பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஜனநாயக சர்வதிகாரம்’ என்ற முழக்கத்தை கைவிட்டு, போல்ஷிவிக் கட்சி தலைமையில் ஏழை விவசாயிகளுடனான கூட்டணியில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததைப் போல, இந்த சூத்திரத்தை கைவிடவேண்டியுள்ளது” ("தொழிலாளர் புரட்சிக் கட்சியின் ஐந்தாண்டுகள், பக்கம் 6.)

இது நம்பமுடியாதளவு அபாயகரமான முட்டாள்தனமாக இருந்தது — ஹீலி “ஜனநாயக சர்வதிகாரத்தையோ” அல்லது தொழிற் கட்சியையோ புரிந்து கொள்ளவில்லை என்பதை தான் இது எடுத்துக்காட்டியது. இந்த சூத்திரத்தை லெனின் உதறித் தள்ளியதற்கும் தொழிற் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டு வரும் நிலைப்பாட்டுக்கு WRP மாறியதையும் ஒப்பிட்டு நோக்குவது மலைப்பூட்டும் பாதிப்புகளைக் கொண்டிருக்கும். அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு சுயாதீனமான கட்சியைக் கட்டமைப்பதற்கு, விவசாயிகளின் வரலாற்று இயலாமையை அவர் உணர்ந்து கொண்டார் என்பதுதான் லெனின் திருத்தம் செய்ததன் உலக வரலாற்று முக்கியத்துவமாக இருந்தது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு முன்னதாக, இடைப்பட்ட சுயாதீன அபிவிருத்திக் கட்டமாக பாட்டாளிகளினதும் விவசாயிகளினதும் ஒரு ஜனநாயக சர்வாதிகாரம் பற்றிய கருத்துரு, போல்ஷிவிக் கட்சியின் வேலைத்திட்டத்தில் இருந்தும் மற்றும் பிந்தைய கம்யூனிஸ்ட் அகிலத்தின் வேலைத்திட்டத்தில் இருந்து (1920 களில் ஸ்ராலின் மற்றும் புக்காரினால் மீட்டுயிர்ப்பிக்கப்படும் வரையில்) நீக்கப்பட்டிருந்தது. தொழிற் கட்சியின் பிரச்சினையை ஏதோவொரு விதத்தில் இந்த திருத்தத்துடன் இணைப்பது என்பது, மிகவும் அடிப்படையான வரலாற்று மற்றும் சமூக இயல்பின் காரணங்களுக்காக (இதை விளங்கப்படுத்துவது குறித்து WRP அக்கறை கொள்ளவில்லை), அங்கே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கு முன்னதாக மற்றொரு தொழிற் கட்சி அரசாங்கம் அமையாது என்று WRP முடிவுக்கு வந்துவிட்டதை மட்டுமே அர்த்தப்படுத்தும். இதுபோன்றதொரு முன்னோக்கு WRP காரியாளர்களை முழுமையாக நிராயுதபாணியாக்குவதையும், தொழிலாள வர்க்கத்தைக் கைவிடுவதையும் அர்த்தப்படுத்தும். அனைத்திற்கும் மேலாக, அரசியல் வழியில் தீவிர பணிகளுக்குப் பதிலாக ஹீலி அவர் போகும் போக்கில் அதை கொண்டு சென்று கொண்டிருந்தார் என்ற உண்மையை அது அம்பலப்படுத்தியது.

அதற்கடுத்த ஆண்டின் போது, தாராளவாத-தொழிற் கட்சி உடன்படிக்கை முடிவுக்கு வந்தது, டோரிக்கள் தொழிற் கட்சி அரசாங்கத்தை தூக்கியெறிவதை ஒழுங்கமைப்பதற்காக இப்போது தயாரிப்பு செய்வதற்குரிய சமிக்ஞையாகும். இதற்கிடையே, அக்டோபர் 1978 தொழிற் கட்சி மாநாட்டில் கலஹன் ஆட்சியின் சம்பள கொள்கைகள் இரண்டுக்கு ஒன்று விகிதத்தில் மறுத்தளிக்கப்படும் மட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தினுள் அந்த ஆட்சிக்கான எதிர்ப்பு மேலெழுந்திருந்தது. மீண்டுமொருமுறை, அபிவிருத்திகள் தொழிற் கட்சி சம்பந்தமாகவும் மற்றும் பரந்த பெருந்திரளான தொழிலாளர்கள் சம்பந்தமாகவும் WRP முடமாகி இருப்பதை அடிக்கோடிட்டன. தொழிலாள வர்க்கம் முழுவதும் இருந்த அளப்பரிய எழுச்சி மற்றும் தொழிற் கட்சிக்குள் நிலவிய குழப்பங்களுக்கு இடையே, WRP முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. இன்னும் மோசமாக, தொழிற் கட்சி அரசாங்கத்தைக் கீழிறக்குவதற்கான ஒருபோதும் மாற்றிக் கொள்ளப்படாத கோரிக்கை, WRP ஐ டோரி கட்சிக்கு அருகே அசௌகரியமான நெருக்கத்தில் நிறுத்துகிறது. எது என்னவாயினும் சரி, இப்போது எப்போதையும் காட்டிலும் அதிகமாக, தொழிற் கட்சி அரசாங்கங்கத்தை கீழிறக்குவோம்! என்பதாக இருந்தது.

WRP ஒரு மார்க்சிச கட்சியாக செயல்பட்டிருந்தால், அது புதிய சூழ்நிலைகளைக் கணக்கில் எடுத்து ஒரு தந்திரோபாய நிலைப்பாட்டை அபிவிருத்தி செய்திருக்கும் மற்றும் தொழிற் கட்சி அரசாங்கம் அதன் மரண பிரசவவேதனையில் இருப்பதையும் மற்றும் மீண்டும் டோரி ஆட்சி அமையக்கூடிய உடனடி அச்சுறுத்தலை கலஹன் மந்திரிசபையை நீக்கி சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நிறுத்த முடியும் என்றும் வலியுறுத்தி இருக்கும். அதை விடுத்து WRP பெருந்திரளான மக்களின் டோரி-எதிர்ப்பு உணர்வுகளுடன் அதன் அரசியல் நிலைப்பாட்டை அடையாளம் காணுவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை.

டோரி-எதிர்ப்பு உணர்வின் எழுச்சியிலிருந்து மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்றிருந்த WRP இந்த அடிப்படை வர்க்க உணர்வை இப்போது முற்றிலும் அலட்சியம் செய்து, அதை புரட்சிகர நோக்கங்களுக்காக பயன்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை என்றளவுக்கு, 1973 மற்றும் 1978 க்கு இடையே WRP இன் அரசியல் மாற்றம் மிகப் பெரியளவில் இருந்தது.